Wednesday, March 18, 2015
� �� �ு � �� �� �ை� �ு� ் � �� �� �்� �ு � �ு� �� �்� �ை� �� �ு� ்
அந்த விவசாயி குட்டி யானையின் உணவுகளைப் பற்றி யானை வளர்க்கும் தனது நண்பர் ஒருவரிடம் கேட்டு அறிந்து கொண்டு வருகிறார், பிறகு அந்த யானையை அவர்களே வளர்ப்பது என்று முடிவு செய்கிறார்கள், அந்த யானையின் கண்களில் அவ்வப்போது வழியும் கண்ணீரை அந்தக் குழந்தைகள் துடைக்கிறார்கள், அந்தக் குட்டி யானையும் அவர்களோடு அன்போடு பழகத் துவங்குகிறது, கொஞ்சம் கொஞ்சமாக அந்த யானையின் கண்களில் கண்ணீர் வருவது நிறுத்தப்படுகிறது, யானைகள் அழுகுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால், அந்தக் குட்டி யானையின் சின்னக் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்பதைப் பார்க்கையில் யானைகள் மனிதர்களைப் போலவே அன்பில் கட்டுண்டு கிடப்பதை என்னால் உணர முடிந்தது. அந்தக் குழந்தைகள் இருவரும் அந்த யானையோடு பொழுதெல்லாம் விளையாடுகிறார்கள், அவர்கள் ஒரு மலைச்சரிவான கிராமத்தில் வசிக்கிறார்கள், அவர்களின் வீடு வைக்கோல் வைத்து வேயப்பட்ட பசுமை நிறைந்த ஒரு சரிவில் இருக்கிறது, அந்தச் சரிவில் யானை எந்தச் சிக்கலும் இல்லாமல் ஏறி விடுகிறது, குழந்தைகளுக்கு சரிவில் ஏறுவது சிரமமாக இருக்கிறது, பெரியவள், சின்னப் பெண்ணை யானையின் வாலைப் பிடித்துக் கொண்டு ஏறுமாறு சொல்கிறாள், அந்த யானைக்குட்டி தனது தும்பிக்கையை நீட்டி அந்தக் குட்டிப் பெண்ணை அழைக்கிறது, பிறகு மெல்ல தனது தும்பிக்கையைச் சுழற்றி அவளை அலாக்காகத் தூக்கி சமதளத்தில் விடுகிறது.
சின்னக் குழந்தை ஒரு முறை காய்ச்சலில் படுத்து விடுகிறாள், அந்த வீட்டின் தாய் அவளுக்கு பத்துப் போட்டு, சில கஷாய மருந்துகளைக் கொடுக்கிறாள், அப்போது அந்த யானை குறுக்கும் மறுக்குமாக நடந்து திரிகிறது, தனது தாயைப் பிரிந்தது போலவே அதன் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்கிறது, உலகின் அத்தனை திரைப்படங்களிலும் காணக் கிடைக்காத ஒரு விதமான கடும் நெருக்கடியை அந்தக் காட்சி வழங்கியது, உடைந்து என் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுக்கின்றன, நான் ஒரு சிறு குழந்தையைப் போலவே அன்று அழுதேன், அவள் குணமான பின்பு அவளை அழைத்துக் கொண்டு அந்த யானை காட்டுக்குள் செல்கிறது, சுற்றிக் காட்டுகிறது, அந்தச் சின்னப் பெண்ணும் அப்போது வளர்ந்து கொஞ்சம் பெரியவளாகிறாள், யானை இந்தக் குழந்தைகள் இருவரையும் சுமந்து கொண்டு இந்தோனேஷியா மலைச் சரிவுகளில் சுற்றித் திரிகிறது. மலைக் காடுகள், தெளிந்த நீரால் நிரம்பி ஓடும் ஆறு வீட்டுக்கருகில் பாய்ந்து ஓடுவது, மேகங்கள் அந்த வீட்டின் வைக்கோல் கூரைகளை உரசிக் கொண்டு திரிவது என்று ஒரு அற்புதமான சூழல் நிலவும் அந்த நிலப்பரப்பில் இயற்கையோடு ஒட்டி உறவாடும் அந்தக் குடும்பம், அந்த யானையையும் சேர்த்துக் கொண்ட பிறகு இன்னும் அழகான குடும்பமாக காட்சியாக்கப்பட்டிருக்கும்.
உலகின் மிகப்பெரிய அரண்மனைகளில் வசிக்கும் குழந்தைகளின் கண்களில் கூட இத்தனை மகிழ்ச்சியை நம்மால் கண்டறிய முடியாதென அந்தக் கணங்களில் உணர்ந்தேன் நான். சில காலங்களுக்குப் பிறகு அந்த யானை குறித்த செய்தி அங்கிருக்கும் காட்டிலாகா அலுவலர்களுக்குத் தெரிய வருகிறது, அவர்கள் அந்த விவசாயியைப் பிடித்துக் கொண்டு போய் லஞ்சம் கேட்கிறார்கள், இல்லாவிட்டால் அந்த யானையை உடனடியாகத் தாங்கள் பிடித்துக் கொண்டு போய் விடுவதாக மிரட்டுகிறார்கள், அந்த விவசாயி அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுக்க முடியாது என்றும், தான் யானையை ஒப்படைப்பதாயும் அவர்களிடம் கூறுகிறார். பிறகு மாலையில் வீடு திரும்புகிறார், குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் யானையைப் பார்த்துக் கண் கலங்குகிறார், குடும்ப உறுப்பினர்களிடத்தில் அந்தச் செய்தியைச் சொல்ல முடியாமல் தவிக்கிறார். எப்படியோ அடுத்த நாள் குழந்தைகளுக்கு இந்தச் செய்தி மறுநாள் தெரிந்து விடுகிறது. அவர்கள் முதல் காட்சியில் இருந்த யானையின் மன நிலையில் கிடந்து தவிக்கிறார்கள், அவர்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் தேங்கிக் கிடக்கிறது, அவர்களின் தவிப்பை நாம் உணரும் போது நாமும் அந்தக் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக மாறி ஒன்றி விடுகிறோம்.
அப்போது ஒரு இளம் காட்டு இலாகா அதிகாரி இவர்களின் வீட்டுக்கு வருகிறான், யானையைப் பார்க்க வேண்டும் என்று வருகிற அவனது கண்களில் கொஞ்சம் கனிவு இருப்பதை அவன் அந்த யானையை வருடிக் கொடுப்பதில் இருந்து கண்டு கொள்ள முடிகிறது, மூத்த பெண்ணுக்கும் அந்த இளம் அதிகாரிக்கும் இடையில் ஒரு சிறு புன்னகை மலர்கிறது, அந்தப் புன்னகையின் வெளிச்சத்தில் யானையின் நிழல் படிகிறது, இந்தக் குழந்தைகள் இருவரும் அந்த யானையின் மீது கொண்டிருக்கும் அன்பைக் கண்டு வியக்கிறான் அந்த இளம் அதிகாரி, அவனும் கூட அந்த யானையை நேசிக்கத் துவங்குகிறான், மூத்த பெண்ணின் மீது காதல் கொள்கிறான் அந்த இளம் இந்தோனேஷியா வாலிபன், பிறிதொரு நாளில் அந்த இளம் அதிகாரி தன்னுடைய குடும்பத்தினரோடு விவசாயியின் வீட்டுக்கு வருகிறான், வழக்கமான சடங்குகள் உடன் கூடிய ஒரு பெண் பார்க்கும் நிகழ்வாக அந்தக் காட்சி இருக்கிறது, அந்த நிகழ்வில் யானையும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது, சின்னப் பெண் அந்த யானையை வந்திருப்பவர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்கிறாள், அவர்களை வரவேற்பது போல அந்த யானை துதிக் கையைத் தூக்கிப் பிளிர்கிறது. படம் முடிகிறது.
மனித வாழ்க்கையில் உறவுகளின் தாக்கம், உயிர் வாழ்க்கையின் சமன்பாடுகள், இயற்கையின் அழகு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையில் இருக்கும் அளப்பரிய மகிழ்ச்சி, ஒரு தந்தையின் கடமைகள், அவனது மனநிலை, குழந்தைகளின் மனநிலை, காதல், இயற்கை அரண்களின் மீதான அரசுகளின் அலட்சியப் போக்கு என்று எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கும் அந்தப் படத்தைப் பார்த்து முடித்த கையோடு (கண்ணோடு) இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையான ஒரு தமிழ்த் திரைப்படம் கண்ணில் பட்டு அந்தப் படத்தின் வலிமையை வேறு இன்னும் தனியாக உணர்த்தியது துணைக் கதை.
யானைகள் குறித்த வியப்பும், பிரம்மிப்பும் குழந்தைப் பருவத்தில் இருந்து எனக்குள் அப்படியே இருக்கிறது, யானையை முதன் முதலாக அருகில் நான் பார்த்தது பள்ளிப் பருவத்தில், ஒரு சர்க்கஸ் நிகழ்விற்காக ஐந்து யானைகள் காரைக்குடி செஞ்சைப் பொட்டலுக்கு வந்திருந்தன, எதிர்ப்புறத்தில் இருக்கும் மரத்தடியில் அந்த யானைகளைக் கட்டிப் போட்டு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள், நான் அனேகமாக ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன், பகல் உணவு இடைவேளையின் போது படை படையாகத் திரண்டு அந்த யானையைப் பார்க்க பெரிய வகுப்பு மாணவர்கள் சென்று வருவார்கள், ஆறு வகுப்பு வரை உள்ள பிள்ளைகள் வாய்ப்பாடு ஒப்புவிக்கும் சிறப்பு வகுப்பொன்றில் கூட வேண்டும், ஒரு வழியாக அந்த வகுப்பை விடுத்து நானும் அந்த யானைகளைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன், சில பெரிய வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து நானும் அந்த யானைகளின் அருகே சென்று பார்த்தேன், யானைகளின் அசைவுகள், அவற்றின் பிளிறல், அவற்றின் முறம் போன்ற காதுகள், அழகான கூர்மையான கண்கள் இவற்றை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டு நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன், பெரிய வகுப்பு மாணவர்கள் அந்த யானைக்கு ஏதோ உணவுப் பொருளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், அனேகமாக அது தேங்காயாகவோ, வாழைப்பழமாகவோ இருக்க வேண்டும், எனக்கும் யானைக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது, ஆனால், கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. சுற்றிலும் பார்த்து விட்டு அருகில் இருந்த ஒரு விளக்குமாற்றுப் புற்களைப் பிடுங்கி ஒரு கொத்தாகச் சேகரித்துக் கொண்டு உருவத்தில் சிறியதாய் இருந்த ஒரு யானையிடம் நெருங்கி அதன் தும்பிக்கையில் கொடுக்க முயன்றேன், அந்த யானையும் அதை வாங்கி தனது வாயருகில் கொண்டு சென்றது, பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை, தும்பிக்கையைச் சுழற்றி அதை வீசி எறிந்து விட்டு என்னை முறைக்க ஆரம்பித்தது, மெதுவாக நகரத் துவங்கினேன், ஒரு அடி முன்னாள் நகர்ந்து அந்த யானை தனது தும்பிக்கையை உயர்த்தி என் தலைக்கருகில் கொண்டு வந்த பின்பு பின்னகர்ந்து கொண்டு விட்டது. அந்த யானை என்னை மன்னிக்க நினைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
யானைகளுக்குக் குழந்தைகளை அடையாளம் தெரிகிறது, அவை குழந்தைகளை கோவில்களின் முன்பு நின்று கொண்டு வாழ்த்தும் போதும், அவர்களைச் சுமக்கும் போதும் பெரிதாக அவர்களைப் பயமுறுத்துவதில்லை, அவர்களை யானைகள் மென்மையாகக் கையாள்கின்றன. அப்படி ஒரு குழந்தையாக அந்த யானை என்னை நினைத்திருக்கலாம், அதன் பிறகு அந்த சர்க்கஸ் முடிந்து யானைகள் ஊரைக் காலி செய்யும் வரை அந்தப் பக்கமே நான் தலை வைத்துப் படுக்கவில்லை.யானைகளைப் பார்த்தவுடன் இன்னும் நமக்குள் இருக்கும் சிறு குழந்தை உயிர்ப்புடன் துள்ளி எழுகிறது, யானைகள் உயிர் வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய அடையாளமாய் இனம் காணப்படுகிறது, யானைகளைக் கண்டதும் உலகம் முழுதும் மனிதர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், யானைகளை வேட்டையாடும் சில மனித மிருகங்களைத் தவிர யாவரும் யானைகளைக் கண்டு ஆனந்தமடைகிறார்கள், சிறிய உருவம் கொண்ட மனிதர்கள் இடும் கட்டளைகளுக்கு யானைகள் கீழ்ப்படிகின்றன, ஆனால், அவற்றின் கீழ்ப்படிதலில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் இழையோடும் அன்பு என்கிற கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது, இது அறுபடும் பல நேரங்களில் யானைகள் தங்கள் சினத்தைக் காட்டத் துவங்குகின்றன, அந்தச் சினத்தில் சிக்கி அதன் தந்தங்களில் பல நேரங்களில் மனிதர்கள் தொங்கிக் கொண்டிருப்பதை நான் செய்திகளில் பார்க்கிறேன்.
யானைகளுக்கு மதம் பிடிக்குமே தவிர மதங்களைப் பிடிக்காது, ஆயினும் நாம் அவற்றுக்கு பட்டையும் நாமமும் சார்த்தி அவற்றைத் தெருக்களில் பிச்சை எடுக்க வைக்கிறோம், யானைகள் எந்த உயிர்களையும் தொல்லை செய்வதில்லை, தங்கள் குடும்பங்களோடு அவை அமைதியான வாழ்க்கையை விரும்புகின்றன, யானைகள் தங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டு வாழ்வாதாரத்தை ஏளனம் செய்யும் மனிதர்களை, என்னை மன்னித்ததைப் போலவே மன்னித்து விடுகின்றன. அவற்றிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள உயரிய பண்புகள் பல இருக்கிறது. யானைகளை நான் நேசிக்கிறேன், யானைகளை எப்போதேனும் தெருவில் அல்லது கோவில்களில் பார்த்தால் அவற்றுக்கு நான் காசு கொடுப்பதில்லை, பழங்களை மட்டுமே வாங்கி அவற்றுக்குக் கொடுக்கிறேன், தலையை ஆட்டியபடி அவை அந்தப் பழங்களை ருசிப்பதை அளவற்ற மகிழ்வோடு எப்போதும் ரசிக்கிறேன், அவற்றின் அருகில் சென்று அவற்றை வருடிக் கொடுப்பதில் ஒரு இனம் புரியாத நெகிழ்ச்சியை நான் இப்போதும் உணர்கிறேன். அவற்றின் மீது அந்த இந்தோனேஷியக் குறும்படத்தில் வரும் குழந்தைகளைப் போலவே ஏறிச் சவாரி செய்ய வேண்டும் என்று ஏங்குகிறேன், அப்படி ஒரு வாழ்க்கை எனக்குக் கிடைக்காத குறையை அந்தத் திரைப்படம் எப்போதும் நிறைவு செய்யும், அந்தத் திரைப்படத்தில் வரும் சின்னக் குழந்தை யானைக்குக் கட்டி விடும் மணியின் ஓசை என் செவிப்பறைகளில் இருந்து எதிரொலித்து இந்தப் பேரண்டமெங்கும் வழிந்து ஓடிக் கொண்டே இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment